தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.
வரும் மே மாதம் புதிய சட்டசபை அமைக்கப்பட வேண்டுமென்பதால் ஏப்ரல் மாதம் தேர்தல் இருக்கும்.
அதற்கான அறிவிப்பு, பிப்ரவரி முதல் வாரத்தல் வரலாமென எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தச் சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி, சீட் பேரம் என பரபரப்பாகத் தொடங்கி விட்டன.
தமிழகத்தில் தற்போது திமுக அதிமுக தவிர இந்த வருடம் தவெக தேர்தல் களம் காண்பதால் அந்தக் கட்சியுடன் எந்தக் கட்சிகள் கூட்டணிக்குச் செல்லும் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
’ஆட்சியில் பங்கு’ என்கிற ஒரு தூண்டிலை வீசிக் காத்திருக்கிறார் நடிகரும் தவெக தலைவருமான விஜய்.
இதுவரை அந்தக் கட்சியுடன் கூட்டணிக்கு எந்தப் பெரிய கட்சியும் செல்லவில்லை.
அதிமுகவுடன் முரண்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திமுகவுடன் முரண்பட்ட நாஞ்சில் சம்பத் போன்ற சில முக்கிய முகங்கள் அங்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஒரு சாரார், விஜய் கட்சிக்கு கூட்டணிக்கு செல்லலாம் என்கிற கருத்துகளைப் பேசி வருகின்றனர்.

ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி முதலில் இந்த விஷயத்தைக் கொளுத்திப் போட, தற்போது அவருக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே அறிக்கைகள் பறந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல் ஆளாக தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து பகிரங்கமாகவே கட்சிக்கு அறிவித்து விட்டு தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கட்சியின் சொத்து பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும் முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவருமான சூர்யபிரகாசம்
அவரிடம் பேசினோம்.