ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலையில் தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட முயன்றனர். ஐம்பது ஐம்பது பேராக குழுக்களாக பிரிந்து அடுத்தடுத்து அறிவாலயம் முன்பிருக்கும் அண்ணா சாலையை மறித்து அமர்ந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறிவாலயத்தின் கதவுகளை மூடி வைத்திருந்த காவல்துறையினர், போராடிய பெண்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். “நாங்க என்ன பாவம் பண்ணோம்? எங்க வேலையைத்தானே கேட்குறோம். 5 மாசமா வேலை இல்லாம சோத்துக்கு கஷ்டப்பட்டு பாருங்க. அப்போதான் எங்க வாழ்க்கை என்னன்னு உங்களுக்குலாம் புரியும்…’ என ஆதங்கத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டே பெண்கள் கைதாகி சென்றனர்.
அறிவாலய முற்றுகையை தொடர்ந்து மதியம் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி முன்பும் தூய்மைப் பணியாளர்கள் மனு கொடுத்து போராடியிருக்கின்றனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ரிப்பன் பில்டிங்கில் போராடி கைதான பிறகு, தூய்மைப் பணியாளர்கள் தரப்பை அரசு இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.