பொன்னேரி: ‘மொழி என்ற பெயரில் பிரிவினை ரீதியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கும் திமுக அரசு, இந்தி திணிப்பு என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது’ என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியது: “உலக அளவிலான சவால்களை நம் வருங்கால தலைமுறையினர் எதிர்கொள்ளும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துகள் கேட்டு, தலைசிறந்த கல்வி வல்லுநர்களால் இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மொழியாக ஏதாவது ஓர் இந்திய மொழியை கற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. பிறகு, அதை தமிழக அரசு அமல்படுத்தாததால், அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மத்திய அரசின் திட்டத்தை ஒரு மாநில அரசு செயல்படுத்த தவறும் போது, அதற்கு ஒதுக்கிய நிதி, மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது வழக்கம். நிதி ஒதுக்காதது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு விளக்கமும் அளித்துள்ளது.
ஆனால், மொழி என்ற பெயரில் பிரிவினை ரீதியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கும் திமுக அரசு, இந்தி திணிப்பு என பொய் பிரசாரம் செய்து வருகிறது” என்று வானதி சீனிவாசன் பேசினார்.