சீர்காழி: “திமுக செய்யும் தவறுகளை கூட்டணிக் கட்சிகள் சுமந்து கொண்டுள்ளன. கூட்டணி கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி மேற்கொண்டார். சீர்காழி பகுதிகளில் கட்சி தொண்டர்கள், பொது மக்களிடையே அவர் பேசியது: “மயிலாடுதுறைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி ஒன்றும் செய்யவில்லை என்று பேசி சென்றுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தையே உருவாக்கி கொடுத்துள்ளேன்.
நான் பொறுப்பேற்ற பிறகு 6 மாவட்டங்களை உருவாக்கி கொடுத்துள்ளோம். 11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள் கொடுத்துள்ளோம். படிப்பு என்றால் பழனிசாமிக்கு கசக்கும் என்று முதல்வர் கூறினார். ஸ்டாலின் அரசால் ஒரு மாவட்டத்தை உருவாக்க முடிந்ததா? மருத்துவக் கல்லூரியை கொண்டுவர முடிந்ததா ?
இந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு துணை முதல்வராக இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். ஆனால். விவசாய நிலங்களை பாதுகாக்க மத்திய அரசோடு தொடர்புகொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொண்டு வந்தேன். அதனால், எந்த அரசு நல்ல அரசு என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக காவிரி நீர் பிரச்சினையில் 50 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி விவசாயிகளுக்கு சாதமாக நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்தது அதிமுக அரசு. தனது குடும்பத்துக்குதான் ஸ்டாலின் நல்ல ஆட்சியை கொடுக்கிறார். நாட்டு மக்களுக்கு இல்லை.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களின் சீருடையை மாற்றி அமைத்துக் கொடுத்தது அதிமுக அரசு. அதிகமான அளவில் மேல்நிலைப் பள்ளிகளை உருவாக்கினோம். ஆனால், அவற்றை திமுக ஆட்சியில் மூட பார்த்தனர். எங்களுடைய அரசை பற்றி குறைசொல்ல முடியுமா? நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் செய்ததாக என் மீது சட்டப்பேரவையில் புகார் தெரிவித்தனர். வழக்கை நடத்தி நிரபராதி என்று நிரூபித்து உங்கள் முன் நிற்கிறேன்.
கச்சத்தீவை மத்திய பாஜக அரசு மீட்டுத்தரவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். திமுக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அதன் பின்னர் மத்தியில் காங்கிரஸ், பாஜக அரசுகளுடன் 16 ஆண்டுகள் திமுக அதிகாரத்தில் இருந்தபோது கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை? அப்போது மீனவர்கள் பற்றி ஏன் சிந்திக்கவில்லை? அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால், மீனவர்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக இப்போது ஸ்டாலின் இதைப் பற்றி பேசி வருகிறார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்காக வீடு வீடாக செல்கிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இந்தத் திட்டத்துக் காக அரசு இயந்திரத்தை முதல்வர் தவறாக பயன்படுத்துகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போராட்டங்கள் நிறைய நடக்கின்றன. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி; அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி. தமிழக முதல்வர் பச்சைப் பொய் பேசுகிறார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரதமர் சென்னை வந்தபோது ‘கோ பேக் மோடி’ என்று கூறிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு ‘வெல்கம் மோடி’ என்று சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்து கவுரவப்படுத்தினார்கள். திமுக செய்யும் தவறுகளை கூட்டணிக் கட்சிகள் சுமந்து கொண்டுள்ளன. கூட்டணி கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.