திமுகவுக்கு பயந்தே அனைத்துக் கட்சி கூட்டத்தில் பலரும் பங்கேற்றனர்: ஜி.கே.வாசன் | Various parties participated in the all party meeting out of fear of DMK GK Vasan opinion

Spread the love

திருச்சி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே எஸ்.ஐ.ஆர் அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்றனர் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக செயல்படாத காரணத்தினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சிலருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

தனியார் காப்பீடு நிறுவனங்களிடமிருந்து மகசூல் இழப்பு காப்பீட்டுத் தொகை, வெள்ள பாதிப்பு நிவாரணம் பெற்றுத்தராமல் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

நெல் கொள்முதல் நிலையங்களில் லாரி இயக்கம் மீட்டர் அடிப்படையில் இயக்க வேண்டும். மது பானங்களை பிரித்து அனுப்புவதில் சிறப்பாக செயல்படும் அரசு, மாறாக நெல் கொள்முதலில் சுணக்கம் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். விவசாயி வயிற்றில் அடித்த அரசு வென்றதாக வரலாறு கிடையாது.

தமிழக அரசு தீர்க்கப்படாத பல முக்கிய பிரச்சினைகளுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டத் தவறுகிறது. ஆனால் வாக்காளர் சீர்திருத்தத்தை குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பணி குறித்து தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

முறையான தேர்தல் நடத்தும் கோட்பாடுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையத்துக்கு ஏன், எதற்கு எதிர்ப்பு; அதன் பின்னணி என்ன? ஆளும் திமுகவுக்கு தோல்வி பயமா? பிஹார் தேர்தலில் தேஜகூ மீண்டும் மலர்ந்து நல்லாட்சி தொடர பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத அரசாக திணறி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே எஸ்.ஐ.ஆர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்றுள்ளனர். பிஹாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தான் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் கூறவில்லை. தோல்வி பயத்தில்தான் தேர்தல் ஆணையத்தின் மீது இண்டியா கூட்டணி குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். வென்ற மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள், தோற்ற/தோற்கப் போவதாக கருதும் மாநிலங்களில் குறை கூறுவார்கள் என்றால் அவர்கள் கூற்றை யாரும் நம்பத் தயாராக இல்லை.

பாஜக, அதிமுக ஆகிய 2 பெரிய கட்சிகளும் இணைந்து தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் வெற்றி பெறும் சூழலை ஏற்படுத்தி வருகின்றன. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை மக்கள் வெறுக்கத் தொடங்கி உள்ளனர். எதிர்மறை வாக்கு அதிகரிக்கிறது. வெற்றி வாய்ப்பு எங்களுக்கு அதிகரித்துள்ளது. இன்னும் 2 மாதத்தில் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் ஓரணியில் இணைந்து ஒருமித்த கருத்தோடு இலக்கை 100 சதவீதம் அடைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இன்னொரு கட்சியின் பிரச்சினையில் தமாகா எப்போதும் கருத்து கூறாது. எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாவட்டத் தலைவர்கள் கே.டி.தனபால், ரவீந்திரன், மாநிலச் செயலாளர்கள் ராஜூ, மதிவாணன், மாநில இளைஞரணிச் செயலாளர் சிவ.கணேசன், நிர்வாகிகள் புங்கனூர் செல்வம், வயலூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *