திமுகவும், முதல்வர் பதவியும் என் இரு கண்கள் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுக பவள விழா
திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(செப். 17) மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
17.9.1949-இல் முன்னாள் முதல்வா் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, 75 ஆண்டுகளை நிறைவு செய்து தனது பவள விழாவை இன்று கொண்டாடுகிறது. இத்துடன் பெரியார், அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை தொடங்கியுள்ள விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் தலைமை வகிக்க, பல்வேறு விருதுகளை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருதாளா்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.
துணை பொதுச் செயலா்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினர்.
முதல்வர் பேச்சு
விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை ஏற்பாடு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கும் கழக தொண்டர்களுக்கும் வாழ்த்துகள். தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை. தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன். தொண்டர்களின் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.