இன்றைக்கு யார் யாரோ கிளம்பி வந்து திமுக-வை அழித்துவிடலாம் என கனவு காண்கிறார்கள். ஆனால், திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் பேசியதாவது: நெருக்கடி காலக்கட்டத்தில் திமுக சந்தித்த தியாகங்கள் நிறைய உண்டு. அதையெல்லாம் கடந்து வந்ததால்தான் இன்றைக்கும் திமுக கம்பீரமாக உயர்ந்து வருகிறது. ஆனால், இன்றைக்கு யார் யாரோ கிளம்பி, இந்தக் கட்சியை அழித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
இதற்கிடையே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போட்டு அந்த அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். சட்டப் போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிசெய்ய திமுக சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், அந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். தமிழகத்தின் ஜனநாயகத்தை காக்கும் காவலர்களாக பூத் ஏஜென்ட்கள் செயல்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாம் வெற்றிபெற பணியாற்ற வேண்டும். மேலும், எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 11-ல்நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.