தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கே இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், அந்த அணியில் அடுத்தடுத்த சிக்கல்கள் எழ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தி.மு.க-வுக்கு நெருக்கமாக இருந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சீட் விசயத்தில் கறார் காட்டும் மூடில் இருப்பதால் அறிவாலயம் தரப்பு அப்செட்டில் இருப்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.
தி.மு.க கூட்டணயில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, ஐ.யு.எம்.எல், ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கிறன. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடனே இந்த முறையும் தேர்தலை சந்திக்க தி.மு.க திட்டமிட்டு வருகிறது. அதனால் சீட் விசயத்தில் பெரிய மாற்றம் இருக்காது என நினைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க தரப்பு பேச்சுவார்த்தை நடத்த துவங்கியதும், நிலைமை மாறியது. தங்களுக்கு கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என வரிசையாக கோரிக்கைகளை வைக்க துவங்கியது காங்கிரஸ். சரி, காங்கிரஸ் கட்சியை கடைசியாக பார்த்துக்கொள்ளலாம் என்று தி.மு.க திட்டமிட்ட நிலையில் அந்த கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சீட் எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட ம.ம.க இந்த முறை ஐந்து சீட்டை எதிர்பார்ப்பதாக சொல்லியது. மற்றொருபுறம், மார்சிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை தங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கேட்க துவங்கியது.
இவர்களை சரிகட்டவே தி.மு.க யோசித்துவரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சயின் தலைவர் திருமாவளவனும் தன் பங்கிற்கு இப்போது தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார். திருமாவின் கோரிக்கையை தி.மு.க-வும் புறக்கணிக்க முடியாது என்கிறார்கள் வி.சி.கவினர்.
கூட்டணி விசயத்தில் திருமா என்ன நினைக்கிறார் என்று வி.சி.கவினரிடம் பேசிய போது, “நாங்கள் தி.மு.க கூட்டணியில் 2019-ம் ஆண்டு தேர்தல் முதல் இப்போதுவரை தொடரந்து கொண்டுள்ளோம். தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியாகவும் இப்போது வி.சி.க வளர்ந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு ஆறு இடங்களில் வாய்ப்பு வழங்கியது தி.மு.க. நான்கு இடங்களில் நாங்கள் வெற்றியும் பெற்றோம்.