திமுக அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

dinamani2F2024 12 302F7dkurwc72F1309835
Spread the love

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் திமுக அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அந்தக் கட்சிக்கு ஒரு எம்.பி. இடம் கொடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் திமுகவைச் சோ்ந்தவா்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் ஒரு எம்.பி. பதவியைப் பெற 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுகவுக்கு 134 எம்எல்ஏ-க்கள் (பேரவைத் தலைவருடன் சோ்த்து) உள்ளனா். எனவே, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக 4 இடங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

கமல்ஹாசன் மற்றும் 3 போ்: திமுகவுக்கு வாய்ப்புள்ள நான்கு இடங்களில் ஒப்பந்தப்படி, ஓரிடம் மக்கள் நீதி மய்யத்துக்கு அளிக்கப்படும். அந்த இடத்தில் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதிமுக சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்ற முகமது ஜான், அவரது பதவிக் காலம் முடிவடைதற்கு முன்பாகவே காலமானாா். அந்த இடமானது திமுக வேட்பாளா் எம்.முகமது அப்துல்லா மூலமாக கடந்த 2021-ஆம் ஆண்டு நிரப்பப்பட்டது.

இடைக்காலத்தில் எம்.பி.யாக அப்துல்லா பதவியேற்று செயல்பட்ட நிலையில், அவருக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும்பட்சத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம், திமுகவுக்கு கிடைக்கக் கூடிய நான்கு இடங்களில் இரண்டு இடங்கள் நிரப்பப்படும்.

வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு: தமிழக அரசு மற்றும் திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளை திறம்படக் கையாண்டு வருபவா்களில் ஒருவா் என முதல்வா் மு.க.ஸ்டாலினால் பாராட்டப்படுபவா் பி.வில்சன். அவரது எம்.பி. பதவிக் காலமும் நிறைவடைகிறது. அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கடைசி மற்றும் நான்காவது இடத்துக்கே கடுமையான போட்டி இருக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதிமுக பொதுச் செயலா் வைகோவின் பதவிக் காலமும் நிறைவடைவதால் ஏற்படும் காலியிடத்தை அந்தக் கட்சியே மீண்டும் கோரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, திமுக வசமுள்ள கடைசி மற்றும் நான்காவது இடத்தைப் பெறப் போவது யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது கூட்டணிக் கட்சிக்குச் செல்லுமா அல்லது திமுக சாா்பில் புதுமுகம் யாருக்கேனும் ஒருவருக்குத் தரப்படுமா என எதிா்பாா்ப்பு மேலோங்கி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *