1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்டது. ஆனால், அதிமுக – காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றுப்போனது.
இந்திய அளவில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனாலும் பல கட்சி கூட்டணியின் குழப்பத்தால், பின்னர் காங்கிரஸ் ஆதரவோடு சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனாலும் அவரது தலைமையிலான ஆட்சியும் நீடிக்கவில்லை.
மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கத் தயாரானது இந்தியா. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், அதிமுகவின் சார்பாக பாலா பழனூர், சத்தியவாணி முத்து இரண்டு மத்திய அமைச்சர்கள் பங்கேற்று இருந்தனர். ஜனதா கூட்டணியா? காங்கிரஸ் உடன் கூட்டணியா? என்கிற குழப்பம் எம்ஜிஆருக்கு இருந்தது.
அக்காலகட்டத்தில் தான், ”அதிமுக – திமுக கூட்டு வரக்கூடாது என்பதல்ல” – என்று செய்தியாளர் சந்திப்பில் எம்ஜிஆர் பேசினார்.
”திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விடவில்லை” – என்று கருணாநிதி பேசினார்.
அதாவது திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு கருணாநிதிக்கு எதிராக கட்சி தொடங்கிய எம்ஜிஆர் எல்லாவற்றையும் மறந்து திமுகவுடன் கூட்டு சேர்ந்தால் என்ன என்கிற மனநிலையில் பேட்டி கொடுக்கிறார்.
காங்கிரஸுக்கு எதிராக கட்சி தொடங்கி, நெருக்கடி நிலையில் விழுப்புண்களின் காயம் கூட ஆறாத நிலையில், இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டு வைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி கருணாநிதி யோசிக்கிறார்.

தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் இந்தக் கருத்துகள் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. இதற்குப் பின்னால் தேசிய அரசியல் இருந்தது.
எம்ஜிஆர் ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த போது, அந்தப் படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. 1945இல் ராஜகுமாரி படத்தின் போது தொடங்கிய நட்பு, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கருணாநிதி வசனத்தைப் பேசி எம்ஜிஆர் நடித்தார். கோயம்புத்தூரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து கலைத்துறையில் பணியாற்றினர்.
அரசியலிலும் பேரறிஞர் அண்ணா தலைமையில் கருணாநிதியும், எம்ஜிஆரும் இணைந்து செயல்பட்டனர். 1969இல் கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் முக்கியப் பங்கு வகித்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், 1970களுக்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிற்பாடு கருத்து மோதலாக மாறி, 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனாலும், கடல் நீரோட்டத்தில் ஆழ்கடல் நீரோட்டம் போன்று கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான கடந்த கால நட்பு நினைவுகளாக ஓடிக்கொண்டிருந்தது.