திருநெல்வேலி: திமுக அரசால் விஜய்க்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை பொதுமக்களிடம் இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவரப் போகிறார்கள். ஒரு குடையின் கீழ் பல கொடிகள் வர வேண்டும் என்பது எனது ஆசை.
யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதையே திமுக அரசு வழக்கமாக வைத்துள்ளது. திமுக ஆட்சியில் 283 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் 55% அதிகமாகியுள்ளது. தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. 5 ஆண்டுகள் முடிந்தால் தேர்தலை நடத்த தேதியை நிர்ணயம் செய்வது தான் வழக்கம். தேர்தல் தேதிக்கு பிரதமர் பஞ்சாங்கமா பார்க்க முடியும்.
கரூருக்கு தவெக தலைவர் விஜய் சென்று இருந்தால் அவர் உயிருக்கு யார் உத்திரவாதம் கொடுப்பது. இதனால்தான் அரசிடம் பாதுகாப்பு கேட்டுள்ளனர். டிடிவி தினகரனும் செந்தில்பாலாஜியும் கரூர் விவகாரம் தொடர்பாக போனில் பேசி இருக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. அவர்கள் இருவரும் போனில் பேசி அரசை குறை சொல்ல வேண்டாம் என சொல்லி இருக்கிறார்களா என்பதும் தெரியாது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான தலைவர். அவரது சிலையவே சேதப்படுத்துகிறார்கள் என்றால் இந்த ஆட்சி மிகமோசமான ஆட்சியாக உள்ளதை தெரிந்து கொள்ளலாம். விஜய் சென்ற இடத்தில் ஏற்கெனவே கூட்டம் வந்துதான் தள்ளுமுள்ளு உருவானது. அவர் அங்கேயே இருந்திருந்தால் அவரை அடித்து கொன்றிருப்பார்கள். இப்போது மீண்டும் விஜய் அங்கு சென்றால் கூட்டம் வரத்தான் செய்யும், தள்ளுமுள்ளு ஏற்படத்தான் செய்யும்.
அந்த சாக்குப்போக்கில் விஜய்யையும் சேர்த்து காலி செய்து விட்டால் என்ன செய்வது. மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அதை திமுக அரசு செய்யத் தவறிவிட்டது. கரூர் சம்பவத்துக்கு 100-க்கு 200 சதவீதம் திமுக அரசுதான் பொறுப்பு. திமுக அரசால் விஜய்க்கு மட்டுமல்ல பொது மக்களுக்குமே ஆபத்து இருக்கிறது.
வரும் 12-ம் தேதி திட்டமிட்டபடி எனது சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. பிஹார் தேர்தல் பணிகளில் பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி நட்டா ஈடுபட்டுள்ளதால் சுற்றுப்பயணம் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கரூர் விவகாரத்தை தொடர்ந்து சுற்றுப்பயணத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசும் காவல் துறையும் கொடுக்கும் அனுமதியின்படி சுற்றுப்பயணம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது அவருடன், திருநெல்வேலி மாவட்ட பாஜக மூத்த நிர்வாகி டி.வி. சுரேஷ், ஓபிசி அணி மாவட்ட தலைவர் ராஜா மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.