திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு தீர்மானம் | TVK executive committee passed a resolution condemning the DMK government

1335137.jpg
Spread the love

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு, வரிகளை உயர்த்தியது, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கை பரப்பு இணை செயலாளர் தாகிரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரேதேர்தல் அறிவிப்புக்கு கண்டனம். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது. இந்த விவகாரத்தில் போராட தயங்கமாட்டோம். நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம்அமைக்க விவசாயிகள் ஒப்புதலின்றி நிலத்தை கையகப்படுத்த கூடாது. கோவையில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மூன்றாவது மொழியை திணிக்கும் மத்திய அரசின் கனவு எந்த காலத்திலும் நிறைவேறாது.

எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் அணுகுமுறையை திமுக ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் கடுமையாக எதிர்க்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், சமூகநீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்பமாட்டார்கள். மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியைநிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆய்வு நடத்த வேண்டும். நீட் விவகாரத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றும் திமுக அரசை எதிர்க்கிறோம்.

கட்டணம், வரிகளை உயர்த்தி மக்களின் பொருளாதார நிலையை கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பட்டப்பகலில் குற்ற செயல்கள், போதைப் பொருட்கள் புழக்கம் போன்ற நிர்வாக சீர்கேட்டைசரிசெய்யாமல், ஆட்சி அதிகாரத்தில் உள்ள சிலரது நலனில் அக்கறையுடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம். பொய்களின் பட்டியலாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு, ஜனநாயகத்தையும், மக்களையும் ஏமாற்றியது ஆளும் திமுக. அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி, மாதம்தோறும் மின்கணக்கீடு செய்ய வேண்டும். ஒருபுறம் மகளிர் உரிமைத்தொகை அறிவித்து, மறுபுறம் மதுக்கடையை திறந்து வருவாய் பெருக்குவது ஏற்புடையது அல்ல.

கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும். தகைசால் தமிழர் விருது வழங்குவதற்காக தமிழக அரசையும், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்திய அரசையும் வரவேற்கிறோம். தவெககட்சி நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் என 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை: தவெக செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி விஜய் பேசியுள்ளார். “கூட்டணி குறித்து பின்னர் ஆலோசிப்போம். சீமான் உட்பட எந்த தலைவர்களையும் இகழ்ந்து பேச கூடாது. குறிப்பாக, அதிமுக மீதான விமர்சனங்களை அறவே தவிர்க்க வேண்டும். தவெக மீதான விமர்சனங்களுக்கு சரியான ஆதாரத்துடன், கண்ணியத்தோடு உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும். சொந்த வாழ்க்கை குறித்து விமர்சிக்க கூடாது. பூத் கமிட்டியிலும், வாக்கு சேகரிப்பிலும் பெண்களை அதிக அளவில் இடம்பெற செய்ய வேண்டும். எங்காவது கொடி ஏற்றவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ அனுமதி கிடைக்காவிட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்கவும். டிச.27-க்கு பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *