‘‘திமுக அரசு மீதான மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’’ – இபிஎஸ் விமர்சனம் | Edappadi Palaniswami press meet in Thoothukudi

1286630.jpg
Spread the love

தூத்துக்குடி: திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக அக்கட்சி ‘ஆர்ப்பாட்டம்’ நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏவின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கடம்பூர் ராஜுவின் இல்லத்துக்குச் நேரில் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் சென்னை திரும்பும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பாலியல் கொடுமை அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது.

கடலூரில் 25 வது வட்ட அதிமுக அவைத்தலைவர் நவநீதம் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொலை நடக்காத நாளே கிடையாது. ஜனவரி 1-ம் தேதி முதல் 595 கொலைகள் நடந்துள்ளன. தமிழகம் கொலை மாநிலமாக மாறியுள்ளது.

இந்த அரசு காவல்துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்காத அரசாக உள்ளது. இனியாவது முதல்வர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆடுகளை வெட்டுவது போல மனிதர்கள் வெட்டப்படுகின்ற நிலையை மாற்ற வேண்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா நடமாட்டம் அதிகமாக உள்ளது. கஞ்சா போதையில் கொலை அதிகரித்து வருகிறது. இதனை திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா தமிழகத்துக்கு வருவதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு திறமை இல்லாத அரசாங்கமாக திமுக அரசு காணப்படுகிறது.. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போதைப் பொருளால் இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்க கூடிய காட்சி தொடர்கிறது. போதையால் பல கொலைகள் தமிழகத்தில் நடந்த வண்ணம் உள்ளன. இது கண்டிக்கத்தக்கது

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழகத்தில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை, அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது.

திமுக நேற்று மத்திய அரசை கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

திமுக மத்தியில் 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. 5 ஆண்டு காலம் பாஜக ஆட்சி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது. பிறகு காங்கிரஸ் மத்தியில் ஆட்சி இருந்த போது திமுக எம்பிக்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். பாஜக ஆட்சியிலும் காங்கிரஸ் ஆட்சியிலும் திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தது .தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் நிதியமைச்சர் ஆக இருந்தார். அப்போது எவ்வளவு பெரிய திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தனர். எவ்வளவு பெரிய திட்டத்தை துவக்கி வைத்தனர். இதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

இன்று தமிழகத்தில் திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இதை மறைக்கவே திமுக நேற்று போராட்டத்தை நடத்தி உள்ளது. இதுதான் உண்மை. 13 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்புகளை இழந்தது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 ல் நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தல் குறித்து ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி வாரியாக எங்களுடைய நிர்வாகிகளை அழைத்து கருத்துக்களை கேட்டு வருகிறோம். பாஜகவுடன் எந்த தேர்தலிலும் கூட்டணி கிடையாது.

எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி ஸ்டாலின் பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் ரூ.1000 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டது. 1050 ஏக்கரில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட இந்த கால்நடை பூங்காவை 3 ஆண்டுகள் ஆகியும் திமுக அரசு திறக்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதனை கிடப்பில் போட்டுள்ளனர்.

கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குரல் கொடுக்கும் முதல்வர், கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்காவை திறக்காதது ஏன். இந்த கால்நடை பூங்காவை திறந்திருந்தால் கால்நடை மருத்துவம் படிக்கும் நமது மாணவர்கள் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதன் மூலம் விவசாயிகள் பயனடைந்திருப்பார்கள். கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலை தூக்கிக் கொண்டு பேசுகிறார். ஆனால் பல லட்சம் செங்கற்களால் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்காவை திறக்கவில்லை. உண்மையிலேயே விவசாயி என்ற முறையில் நான் வேதனைப்படுகிறேன்.

சிவகங்கையில் பெண் அதிகாரியை திமுக நிர்வாகி இருக்கையால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. எனவே தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *