திமுக ஆட்சிக்கு எதிரான ‘கவுன்ட்டவுன்’ தொடங்கிவிட்டது – மதுரையில் நயினார் நாகேந்திரன் தகவல் | countdown against the DMK has begun says Nainar Nagendran

1379556
Spread the love

மதுரை: திமுக ஆட்சிக்கு எதிரான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரை கைத்தறி நகரில் பாஜக சார்பில் முன்மாதிரி கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், அதிமுக ஐடி பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் பாஜக சார்பில் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிசாமி 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மிகப் பெரியளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் பாஜக தேசிய தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சுற்றுப்பயணத்தின் போது கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகள் கேட்போம். அந்த குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

திமுக மக்களின் நன்மையை பார்க்காமல் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆட்சி நடத்துகிறது. இந்த ஆட்சி வெகு விரைவில் அகற்றப்படும். அதற்கு மூகூர்த்தநாள் குறிக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் பெண்கள் மீதான தாக்குதல், பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராக உள்ளனர். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை குறித்து சுற்றுப்பயணத்தின் போது மக்களிடம் பேசுவோம்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியம் தருவதாக கூறினார்கள். ஆட்சி முடியப்போகும் நிலையிலும் தரவில்லை. சென்னை, மதுரை, கோவை மாநகராட்சியில் கோரிக்கைக்காக போராடிய தூய்மைப்பணியாளர்களை மிரட்டி வெளியேற்றியுள்ளனர். இந்த ஆட்சி தொடரக்கூடாது. திமுக அரசு போல் எந்த அரசும் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு உள்ளான அரசு இல்லை.

கரூரில் 41 பேர் இறந்ததற்கு அரசும், போலீஸாரும் தான் பொறுப்பு. முதல்வர் ஸ்டாலின் தான் காவல்துறையை வைத்துள்ளார். தினமும் படுகொலைகள் நடைபெறுகின்றன. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கின்றனர். விபத்தில் இறந்தால் ரூ.2 லட்சம் தான் கொடுக்கின்றனர்.

திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் சிறுநீரக திருட்டு நடைபெற்றுள்ளது. ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து சம்பவங்களிலும் திமுக பின்னணியில் உள்ளது. தமிழகம் மோசமான சூழ்நிலையில் உள்ளது. திமுக அரசின் கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணியின் தலைவர் இபிஎஸ் முதல்வராக பதவியேற்பார்.

அனைத்து மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் தலைகுனிந்த நிலையில் உள்ளது. மாநில அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாநில அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்களாகும். மற்ற மாநிலங்கள் தமிழகத்தை ஏளனமாக பார்க்கும் நிலை தான் உள்ளது. இதனால் பாஜக சுற்றுபயணத்துக்கு தமிழகம் தலை நிமிர, தமிழினின் பயணம் என பெயரிடப்பட்டுள்ளது.

கரூரில் தவெகவுக்கு ரவுண்டானாவில் இடம் கேட்டனர். ஆனால் குறுகிய இடம் கொடுத்துள்ளனர். திமுகவை பொறுத்து வரை எதிர்கட்சிகள் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. மக்களிடம் பேசக்கூடாது என நினைக்கின்றனர். கரூரில் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாக்கடையில் விழுந்து பலர் இறந்துள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே செந்தில்பாலாஜி செல்கிறார். அவர் வருவதற்கு முன்பே ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன. ரவுடிகள் புகுந்து பிளேடால் பலரை வெட்டியுள்ளனர். பெண்களிடம் மோசமாக நடந்துள்ளனர். இந்த சூழலுக்கு முழுக்க முழக்க திமுக தான் காரணம். ஜாதி பெயர்கள் இருக்க வேண்டாம். அதே நேரத்தில் சுதந்திரத்துக்காக போராடியவர்களை ஜாதி தலைவர்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. எல்லா ஊர்களிலும் கலைஞர் பெயர் உள்ளது. அனைத்து ஊர்களிலும் கலைஞர் பெயர் வைக்கின்றனர். ஒரு இடத்தில் வைத்தால் போதாதா? இதை ஏன் அனுமதிக்கிறார்கள்? இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *