சென்னை: “தமிழக அரசின் அலட்சியம் காரணமாக தான் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்.” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது: இருமல் மருந்து குடித்து, 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு அலட்சியமாக இருந்ததால் உயிரிழப்புகள் நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தோம்.
மருந்து நிறுவனத்தில் நடந்த சோதனையில் முறைகேடு கண்டறியப்பட்டு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டும், 2024 மற்றும் 2025ல் தமிழக அரசு சோதனை செய்யவில்லை. மருந்து உற்பத்தியை சரிவர கண்காணிக்காததால் தான் இறப்பு நேர்ந்துள்ளது.
சிறுநீரக முறைகேடு புகாரில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அமைச்சர் ஏதேதோ சொல்லி மழுப்பி முடித்துவிடுகிறார். திமுக அரசாங்கத்தில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும். 2021ஆம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. இப்போது அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். விவசாயிகளுக்கு துரோகம் செய்யக்கூடிய அரசாக திமுக உள்ளது. தொழில்துறையில் ஈட்ட முதலீடுகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். திமுகவில் எல்லாமே வெற்று அறிவிப்பு தான்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.