திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி | Anbumani alleges Crimes against children increase by 61% under DMK rule

Spread the love

சென்னை: திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 60.66% அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6968 ஆக அதிகரித்திருப்பதாகவும், 2023-ஆம் ஆண்டில் மட்டும் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338 ஆக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ஆம் ஆண்டில் 6064 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 6580 ஆகவும், 2023-ஆம் ஆண்டில் 6968 ஆகவும் அதிகரித்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை 60.66% அதிகரித்திருக்கிறது.

2023-ஆம் ஆண்டில் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டில் 81 குழந்தைகள், 2021-ஆம் ஆண்டில் 69 குழந்தைகள் என திமுக ஆட்சியில் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். திமுக ஆட்சியில் மொத்தம் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வளர்ச்சியடைந்து விட்டது, சிசுக்கொலைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன என ஆட்சியாளர்கள் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் 28 குழந்தைகள் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இந்த புள்ளிவிவரங்களின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் அனைத்து மூலைகளிலும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பது, குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து தடுமாறுவது போன்றவை தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். இதற்கு காரணமான திமுக அரசு தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

குற்றங்களுக்கு குறித்த காலத்தில் தண்டனை வழங்கப்பட்டால் தான் குற்றம் செய்பவர்கள் திருந்துவார்கள். அந்த விஷயத்திலும் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தமிழக மாவட்டங்களில் 53 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், இதுவரை 20 நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதனால் 60% போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை ஆகும். இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தெய்வங்களாக போற்றப்பட வேண்டிய குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *