திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்: நயினார் நாகேந்திரன் | nainar nagendran slams dmk govt over women’s safety

Spread the love

சென்னை: ‘தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்’ என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது, வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள், “தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்” என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்.

இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் ஸ்டாலின் கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கு எதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் முக ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *