செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை வந்துள்ளார்.கேரளத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் வந்தார். பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “இந்த உலகத்தை இயங்கிக் கொண்டிருக்கும் சக்திக்கான ஆற்றல் பெருகத் தொடங்கும் நாள் இன்று வசந்த பஞ்சமி. இந்த நாளில் இங்கு வந்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி மக்களாட்சியை உருவாக்க வந்திருக்கிறார் பிரதமர் மோடி.
அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்திருக்கிறோம். நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தது உண்மைதான். ஆனால் கட்சி நலன், தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டும் பிரதமரின் அழைப்பை ஏற்றும் எங்கள் மனதில் இருந்த கோபத்தை விட்டுவிட்டு 2021 முடியாமல்போன ஆட்சியை உறுதியாக தமிழகத்தில் இந்தமுறை உருவாக்கிட எந்தவித தயக்கமுமின்றி குழப்பமுமின்றி அழுத்தமுமின்றி இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.
எதிர்ப்பதிலும் சரி, ஆதரிப்பதிலும் சரி உறுதியாக இருக்க ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். எனவே கூட்டணியில் உறுதியாக இருப்போம். மக்கள்விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம். தமிழ்நாடு கொலை நாடாக, கொள்ளை நாடாக மாறிக் கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் புகலிடமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது.
அரசு ஊழியர்கள், விவசாயிகள், மக்கள், மாணவர்கள் என அனைவரும் போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினோ தனது மகன் உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார். அதை முறியடித்து மக்களாட்சியை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். எங்களுடைய தொண்டர்கள் அதற்காக உழைப்பார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று பேசினார்.
இதற்கு முன்னதாக பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்;-“தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதையின் மைந்தன் மோடி வந்துள்ளார். இது பொதுக்கூட்டம் அல்ல, இது ஒரு மாநாடு. மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டத்தால் சென்னை சட்டமன்றத்தில் இன்று பெரிய பதற்றம். பல செடிகளில் பூத்த மணம் வீசுகின்ற மலர்கள் மாலையாகி இறைவனிடத்தில் சேரும். அதே போல் மணம் வீசும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் இன்று ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
இந்த மாநாட்டை வானமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி சென்னை வருகை தரும்போது சூரியன் மறைந்து போனது. நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அதற்கான வேலைகளை பிரதமர் மோடியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை, சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.
மக்கள் மீது அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள், 11 வந்தே பாரத் ரெயில்கள், கடந்த 11 ஆண்டு காலத்தில் 14 லட்சம் கோடி ரூபாய் நிதியை தமிழகத்திற்கு தந்துள்ளார்.” இவ்வாறு அவர் பேசினார்
