சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் கடந்த 2020-ம் ஆண்டு அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. இதில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பிறகு, நீதிமன்ற உத்தரவால் கடந்த 2021 பிப்ரவரியில் பறிமுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் விதிகளை மீறி பல்வேறு முதலீடுகள் செய்திருப்பதாக நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை கடந்த 2021 டிசம்பரில் ஆதாரங்களுடன் தெரிவித்தது.
குறிப்பாக, ‘சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.42 கோடியும், இலங்கை நிறுவனத்தில் ரூ.9 கோடியும் முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டில் முடக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெகத்ரட்சகனுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, ரூ.89.19 கோடிசொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் நடந்துள்ள ஒவ்வொரு விதிமீறலுக்காகவும் அவருக்கு ரூ.908 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(இதற்கிடையே, ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் கருத்தை அறிய தொடர்பு கொண்டோம். அவர் தகவல் அளிக்கும் பட்சத்தில், அதை பிரசுரிக்க தயாராக உள்ளோம்.)