'திமுக ஒரு ஆமை; உதயநிதி அப்டேட்டே ஆகவில்லை!' – ஜெயக்குமார் கடும் தாக்கு!

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் இரண்டரை மாதங்களே இருக்கிறது. இந்நிலையில், இன்று (15.12.2025) முதல் அதிமுக விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய தொடங்கியிருக்கிறது. இன்று மதியம் 12 மணிக்கு ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில் தொடங்கிய விருப்ப மனு விநியோக நிகழ்வில், விண்ணப்பங்களை பெற அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

ஒரு விருப்ப மனுக்கான கட்டணமாக 15000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. முதல் விருப்ப மனுவை சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.பி.கந்தன் வாங்கியிருந்தார். அவர் பேசுகையில், ‘பொதுக்குழுவில் கூறியதை போல 210 தொகுதிகளில் வெல்வோம். திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்.

எந்தக் கட்சிக்கும் இப்படியொரு எழுச்சி இல்லை. என்னுடைய சோழிங்கநல்லூர் தொகுதியில் எனக்காகவும், அண்ணன் பழனிசாமிக்காக எடப்பாடி தொகுதிக்கும் என இரண்டு விருப்ப மனுக்களை வாங்கியிருக்கிறேன்’ என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ‘விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளே பெரும் எழுச்சியை பார்க்க முடிகிறது. இந்த எழுச்சியை பார்க்கையில் ஒரு மகத்தான வெற்றியை பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம்.

அதிமுக முன் கூட்டியே விருப்ப மனு வாங்கினால் திமுகவுக்கு என்ன? அதை ஏன் அவர்கள் விமர்சிக்கிறார்கள்? அவர்கள் ஆமையாக இருக்கலாம். ஆமை வேகத்தில் செல்கிறார்கள். எங்களை பார்த்து ஆமைகளுக்கு என்ன விமர்சனம்?

அதிமுகவை உறிஞ்சு உண்டு கொழுத்து இங்கிருந்து திமுகவுக்கு சென்றவர்கள்தான் இன்றைக்கு ஸ்டாலினை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்..

நீராவி இரயிலுக்குதான் எஞ்சின் தேவை. புல்லட் ரயிலுக்கு எதற்கு எஞ்சின் தேவை? அப்டேட் இல்லாத உதயநிதி அவரை அவரே கேவலப்படுத்திக் கொள்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. எல்லா கட்சிகளைப் போலவும் பாஜகவும் அதிக சீட்தான் கேட்கும். அதைப்பற்றியெல்லாம் என்னால் சொல்ல முடியாது. சரியான சமயத்தில் தலைமை அறிவிப்பார்கள்.

வெற்றியோ தோல்வியோ நான் எங்கும் எந்த கட்சிக்கும் மாறவில்லை என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன்.

மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. எனக்கு எப்போதும் ராயபுரம்தான்.

பிரிந்து சென்றவர்களை இணைப்பதைப் பற்றி நான் முடிவெடுக்க முடியாது. தலைமைதான் கூற வேண்டும்’ என்றார்.

டிசம்பர் 23 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *