இவ்வாறு சிதம்பரம் தெரிவித்து பல மணிநேரம் கடந்தபிறகும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருத்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர். ஒரு வழியாக வெளியான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்திக்குறிப்பில், ‘2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைத்திருக்கிறார்கள்.
அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் பின்னணி குறித்து பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், “தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனச் செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு குழுவும், த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாமென மாணிக்கம் தாகூர் தலைமையில் ஒரு பிரிவும் வேலை செய்து வருகிறது. இதில் பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு செல்வப்பெருந்தகை தரப்பின் கை ஓங்கியிருக்கிறது. எனவேதான் அவர்கள் கடந்த சில நாட்களாகத் தி.மு.க-வுடன்தான் கூட்டணியெனப் பேசி வருகிறார்கள். ஆனால் தி.மு.க, த.வெ.க என யாருடன் கூட்டணிக்குச் செல்வது என எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் டெல்லி தலைமை எடுக்கவில்லை. தற்போதைக்கு தேவையில்லாத சலசலப்புகளை தவிர்க்கும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணிகுறித்த இறுதி முடிவை டெல்லி எடுக்கும். இந்தமுறை தொகுதிகளின் எண்ணிக்கையையும் டெல்லி தலைமைதான் இறுதி செய்யும்” என்றனர்.