சென்னை: “தற்போதைய திமுக ஆட்சிக் காலத்திலும் திரைத் துறை முடங்கிப்போய் உள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வந்துள்ள விஜய் முதலில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரைத் துறையை மீட்டு சிறப்பாக செயல்பட ஆவன செய்ய வேண்டும்,” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்து இன்று கட்சி கொடியை அறிமுகப்படுத்தி உள்ள அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நடிகர் விஜய் தான் கொண்ட லட்சியத்தில் உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வெற்றி வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
விஜய்க்கு வாழ்வு கொடுத்தது தமிழக திரையுலகம். இன்றுவரை தமிழக திரைத் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட முடியாமல் முடக்கப்பட்டுள்ளன. 2006 முதல் 2011 வரை அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திரைத்துறை முடங்கியே இருந்தது. அதேபோல தற்போதைய திமுக ஆட்சிக் காலத்திலும் திரைத் துறை முடங்கிப்போய் உள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வந்துள்ள விஜய் முதலில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரைத் துறையை மீட்டு சிறப்பாக செயல்பட ஆவன செய்ய வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.