“திமுக கூட்டணியில் விரைவில் விரிசல்…” – ராம சீனிவாசன் கணிப்பு | DMK alliance  will be crack soon Rama Srinivasan predict

1358336.jpg
Spread the love

மதுரை: “அதிமுக – பாஜக கூட்டணியால் திமுகவுக்கு பயம் வந்துள்ளது. திமுக கூட்டணியில் விரைவில் விரிசல் வரும். அப்போது திமுகவின் பயம் இன்னும் அதிகரிக்கும்” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார்.

தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நேஷனல் ஹெரால்ட் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் விசாரித்துள்ளனர். இந்த வழக்குக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. இது பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை.

பாஜக ஆட்சிக்கு முன்பே சுப்பிரமணியசுவாமியால் தொடரப்பட்ட வழக்கு இது. அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க முடியாது. முறைகேடான பணப்பரிவர்த்தனை நடைபெற்றால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தும். செந்தில் பாலாஜி வழக்கில் மாநில காவல் துறைதான் வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். அமைச்சராக இருந்துள்ளார். அவர் தலைவரானதை ஏற்றுக்கொண்டுள்ளோம். திமுகவையும், திமுக ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவினரின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற ஒவ்வொருவரும் அவர்கள் பாணியில் செயல்பட்டு வருகின்றனர்.

அதிமுக – பாஜக கூட்டணியில் முரண்பாடு இல்லை. அதிமுக எப்போதும் பாஜகவின் நட்பு கட்சிதான். பாஜகவின் கொள்கைக்கு பலமுறை ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இரு கட்சிகளும் பலமுறை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. இப்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கிய கட்சிதான் திமுக. மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்தில் திமுக ஆட்சியை இரு முறை டிஸ்மிஸ் செய்தது. இப்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணியால் திமுகவுக்கு பயம் வந்துள்ளது. திமுக கூட்டணியில் விரைவில் விரிசல் வரும். அப்போது திமுகவுக்கு பயம் அதிகரிக்கும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்ஜிஆர், என்டிஆர் தவிர வேறு யாராலும் வெற்றிபெற முடியவில்லை. விஜய்காந்த் வந்தார், அவரால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. கமலால் வெற்றிபெற முடியாது. அந்த வகையில் நடிகர் விஜயால் வெற்றி பெற முடியாது. இந்த யாதார்த்தம் விஜய்க்கு புரிவதற்கு கொஞ்ச நாளாகும். விஜய் அரசியலில் இருப்பது பாஜகவுக்கு நல்லது. திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தான் விஜய் பிரிப்பார். இது பாஜக கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *