திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்: மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்க முடிவு | First meeting of DMK Legislative Assembly Election Coordination Committee

1282919.jpg
Spread the love

சென்னை: திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்று, மாவட்டங்கள் பிரிப்பு, புதியவர்கள் நியமனம் ஆகியவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் சட்டப்பேரவை தொகுதிகளில் 221-ல் திமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது. எனவே, வரும் 2026 தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் திமுக உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தல் முடிந்ததுமே, தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இக்குழுவில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இளைஞரணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி விரைவில் வழங்கப்படும் என்று பரவலாக பேச்சு உள்ள நிலையில், தற்போது அடுத்த சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழுவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி நிலவரம், எம்எல்ஏவின் பணிகள், கட்சியினர் மற்றும் மக்களின் மனநிலை அறிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அமைப்பு ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான அடிப்படை பணிகளை இக்குழு மேற்கொள்ள உள்ளது. இதற்காகவும், அடுத்து வரும் தேர்தலில் தொகுதிகள் அடிப்படையில் பிரித்து நிர்வாகிகள் பணியாற்றும் வகையில் மாவட்ட செயலாளர்களை அழைத்து சந்தித்து, அவர்களிடம் கருத்து கேட்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *