ராஜபாளையம்: திமுக தொண்டர்களே வெறுக்கும் வகையில் இந்த ஆட்சி நடக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ராஜபாளையத்தில் அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் வகித்தார். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் முத்துராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: “சிவகாசி அரசு மருத்துவமனையில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தீக்காய சிகிச்சை பிரிவு செயலற்று உள்ளதால், பட்டாசு விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். திமுக அரசு வாங்கும் கடன் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகிறது. அதிமுக அரசு நிதி ஒதுக்கி தொடங்கிய திட்டங்களை தான், தற்போது திமுக அரசு திறந்து வைத்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 8 குடிநீர் திட்டங்களில் 5 திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. திமுக அரசு கூட்டணியை காப்பாற்றுவதில் தான் கவனமாக உள்ளது. கூட்டணி பலத்துடன் 2026ல் வெற்றி பெற்று ஆட்சியமைத்து விடலாம் என திமுக கணக்கு போடுகிறது. திமுக தொண்டர்களே வெறுக்கும் வகையில் இந்த ஆட்சி நடக்கிறது. 2026ல் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைத்து உழைக்க வேண்டும்” என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.