கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “செந்தில் பாலாஜி, தி.மு.க அரசுதான் கதவணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததாகப் பேசி வருகிறார். அ.தி.மு.க அரசு திட்டத்தை அறிவித்தவுடன் ரூ. 420 நிதியை ஒதுக்கீடு செய்தது. தி.மு.க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது என்று செந்தில் பாலாஜி நிரூபித்தால், தமிழக அரசியலை விட்டு நான் விலகி விடுகிறேன்.
தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேசுவதெல்லாம் பொய்யாக உள்ளது. அதனை மக்கள் நம்ப மாட்டார்கள் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராகி விட்டார்கள்” என்றார்.