காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு நடைபயணமாக வர முயன்ற பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த 13 பேர் இன்று (செப்டம்பர் 28-ம் தேதி) கைது செய்யப்பட்டனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனை எதிர்த்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்துக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து முறையிட பரந்தூர் விமான நிலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் அம்பேத்கர் சிலையில் இருந்து புறப்பட்டு மாநாட்டுத் திடலை நோக்கிச் நடைபயணமாகச் செல்ல போராட்டக் குழுவின் நிர்வாகிகள் 13 பேர் முடிவு செய்தனர்.
அதன்படி இவர்கள் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலையில் இருந்து புறப்பட்டனர். சுமார் 100 மீட்டர் தூரம் வந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமங்கலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் ப.ரவிச்சந்திரன், செயலர் ஜி.சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.