சென்னை: திமுகவின் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கத் தேர்தல் கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கபட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிப்ரவரி மாதம் அறிவித்த தேர்தலை ரத்து செய்து, மே மாதம் தேர்தல் நடக்க இருப்பதாக திமுக அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் நடத்தபடாமல், திடீரென தலைவர், பொது செயலாளர் மற்றும் பொருளாளரை நியமித்து கடந்த ஜூன் 21ம் தேதி ‘முரசொலி’யில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், தேர்தல் நடத்தாமல் தலைவர், பொது செயலாளர், பொருளாளரை நியமித்தது ஜனநாயக விரோதம் எனவும், சங்க விதிமுறைகளுக்கு புறம்பானது என மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த மனோகரன், மணிமாறன் உள்ளிட்ட 59 தொழிலாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர் பிரசாத், ஆர்.திரு மூர்த்தி ஆஜராகி வாதிட்டனர். தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்பு ஒருதலைப் பட்சமாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இது விதிகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்தனர்.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி, ”மறு தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, மாநகர் போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் சங்க செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.