இது தொடர்பாக தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆளும் கட்சி பிரமுகர் வீட்டிலேயே கொள்ளை போனதை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்யும் என்பதால் போலீஸார் இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தினர். இதில் ஈடுப்பட்ட கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கொள்ளை நடந்த வீட்டுக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு செய்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, மகன்கள், மகள் ஆகியோர் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதையும் அவர்கள் தர்மபுரியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீஸார் தர்மபுரிக்கு விரைந்து சென்று ரயில் நகரை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன்கள் சாதிக் பாஷா (33), மொய்தீன் (37), மகள் ஆயிஷா பர்வீன் (30), மனைவி பாத்திமா ரசூல் (54) ஆகிய நான்கு பேரை கைது செய்து அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து கொள்ளைபோன 87 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதே குடும்பத்தைச் சேர்ந்த தலைமறைவாக உள்ள ஷாஜகான் (26) என்பவரைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.