“திமுக மேனாமினுக்கி கட்சியல்ல” – அமைச்சர் துரைமுருகன் பதிவின் பின்னணி என்ன? | What is the background behind Minister Duraimurugan social media post?

1312980.jpg
Spread the love

சென்னை: திமுகவுக்கு மன உறுதி, கொள்கை பிடிப்பு, தியாக உணர்வுடன் வரும் இளைஞர்களை வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுகவில் அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், முடிவெடுக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை, அதற்கான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இருக்கும் நிலையில், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று இளைஞரணி நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதியே பேசியிருந்தார். அதன்பின், அமைச்சர் எ.வ.வேலு புத்தக வெளியீட்டுவிழாவில் ரஜினிகாந்த் பேசியதும் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் வந்தால் வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகனும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று (செப்.17) சென்னையில் நடைபெற்றது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்று வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்ததால், இந்த விழாக்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தச் சூழலில், மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக மாலை 5.17 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்தார்.

அந்த வீடியோவில் அமைச்சர் பேசியது: “இன்று நிறைய இளைஞர்கள், படித்தவர்கள் திமுக பக்கம் திரும்பியுள்ளனர். அவர்களை எல்லாம் நான் வரவேற்கிறேன். காரணம் இளைஞர்கள் வந்தால் தான் இந்த கட்சியை நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால், இளைஞர்கள் இயக்கத்துக்கு வரும்போது, கட்சியில் நிலைக்க மன உறுதி வேண்டும். மன உறுதி எப்போது வரும் என்றால், நாம் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை உண்மையானது. இந்த கொள்கைக்காக உழைக்கலாம், தியாகம் செய்யலாம் என்ற எண்ணம் உங்களுக்கு வரும். ஆகவே கொள்கையின் அடிப்படையில்தான் இந்த இயக்கத்துக்கு நீங்கள் வரவேண்டும்.

இந்த இயக்கம் கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ள இயக்கம் என்பதால், மன திடத்துடன், கொள்கையுடன் வாருங்கள். நீண்ட வரலாறு இந்த கட்சிக்கு உண்டு. அந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். தியாகம் புரிய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, “தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று கருதுகிறவன் கட்சியின் ரத்த நாளத்தை போன்றவன், கட்சியால் எனக்கு என்ன லாபம் என்று எண்ணுபவன் கட்சியில் வளரும் புற்றுநோய்க்கு சமமானவன்” என்று கூறியுள்ளார். எனவே, வரும் நண்பர்களை எல்லாம் மனமார வரவேற்கிறேன்.

எங்களுக்குப்பிறகு இந்த கட்சியை நீ்ங்கள்தான் கட்டிக்காகக்க வேண்டும். எனவே, கொள்கை, உறுதியோடு, மனதிடத்துடன், தியாகம் எந்த நிலைக்கும் தயார் என்ற நினைத்து, வரலாறுகளை படித்துவிட்டு வாருங்கள். இது மேனாமினுக்கி கட்சியல்ல, அடித்தளத்தில் உள்ள ஏழை எளியவர்கள், பாட்டாளி தோழர்கள், நெசவாளர்கள் இப்படிப்பட்ட சமுதாயத்துக்காக உழைக்கும் கட்சி. அதையும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான், இதற்கு பதிலளிக்கும் வகையிலும், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கும் எண்ணத்திலும், பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருது பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், “திமுகவின் வைரவிழா ஆண்டை கொண்டாடவும், எங்களை வழிநடத்தவும் நீங்கள் ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும். உங்களுக்கும், மேடையில் உள்ள தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாமா? பேராசிரியரைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை. பேராசிரியர் பெரிய மனதுடன் தலைவரை துணை முதல்வராக அன்று ஏற்றுக் கொண்டார். நாங்களும் ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்?” என்று பேசியதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *