“திமுக வேஷம் போடவில்லை; மக்கள் எங்களை நம்புகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி | Minister Nehru slams tvk leader Vijay

Spread the love

சென்னை: “தவெக தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுகவினர் நல்லவர்கள் போல் வேஷம் போடுவதாகத் தெரியலாம். ஆனால் திமுக அரசு நிறைவேற்றும் திட்டங்களால் திமுகவை மக்கள் நல்லவர்களாகவே பார்க்கிறார்கள்.” என்று அமைச்சர் நேரு கூறினார்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.119.22 கோடி மதிப்பீட்டில் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 174 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இதேபோல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் ரூ.320 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல் அந்தநல்லூர் ஒன்றியம் திருச்செந்துறை, முக்கொம்பு ஆகிய இடங்களில் 7 பணிகளை திறந்து வைத்து, காவிரி கொள்ளிடத்தில் 4 லட்சம் மீன் குஞ்சுகளை விடுப்பு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருப்பைஞ்சீலி, லால்குடி, புள்ளம்பாடி ரெட்டி மாங்குடி, முசிறி தண்டலைபுத்தூர்,தொட்டியம், உப்பிலியபுரம், துறையூர் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 13 இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் ரூ. .406.63 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பங்கேற்று மீன்குஞ்சுகளை விட்டார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பிற்கு வாக்குச்சாவடி முகவர்கள் செல்லலாம் என தேர்தல் ஆணையமே அனுமதி கொடுத்துள்ளது. அதில் என்ன தவறு உள்ளது. மற்ற கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் வருவதை யாரும் தடுப்பதில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதியிலும் உள்ள வாக்கு சாவடிகளுக்கும் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். படிவத்தை நிரப்பி தர திமுகவினர் உதவுவதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவினர் உதவி செய்ய செல்லவில்லை என்றால் திமுகவினரும் செல்லக் கூடாது என்று கூறினால் எப்படி ?

நாளை ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இதை கவனிக்கவில்லை என்று எங்கள் மீதுதான் குற்றம் சாட்டுவார்கள். நாங்கள் சரியாகத்தான் இப்பணிகளை செய்து வருகிறோம். மத்திய அரசு ஜல்ஜீவன், நூறு நாள் வேலை திட்டம், மெட்ரோ, ஜி.எஸ்.டி.யில் பங்கு என எதற்கும் நிதி ஒதுக்குவதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 12 திட்டங்கள் நிதி ஒதுக்காததால் செயல்படுத்த முடியாமல் உள்ளது. அவர்கள் திட்டங்கள் கொடுத்தால் நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம்.

தவெக தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுக ஆட்சி நல்லவர்கள் போல் வேஷம் போடுவது போல் தெரியலாம் ஆனால் நாட்டு மக்களுக்கு, திமுகவும், திமுக ஆட்சியும், முதல்வரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். பல நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்காக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். திமுகவினர் நல்லவர்கள் போல் வேஷம் போடவில்லை, உண்மையாக நல்லவர்களாக இருப்பதால்தான் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மக்கள் அனைவரும் முதல்வரை வரவேற்கிறார்கள். 210 தொகுதிகளில் வெல்வோம் என கூறும் அதிமுகவினர் மீதி உள்ள 20 தொகுதிகளை ஏன் விட்டுவிட்டார்கள்’ என நகைச்சுவையாக கேட்டு சென்றார்.

திருப்பதி காணிக்கை: அமைச்சர் கே.என்.நேரு கடந்த 9-ம் தேதியன்று தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி திருமலை, ஏழுமலையான் கோயில் அன்னதானத்துக்கு ரூ.44 லட்சம் வழங்கியுள்ளதாக ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து முக்கொம்பில் அமைச்சர் நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் பணம் கட்டுகிறேன். கட்டக்கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ரு.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும். எல்லாரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?.” என எதிர் கேள்வி எழுப்பினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *