திரண்ட மகளிர் படை முதல் தீர்மானங்கள் வரை: விசிக மது ஒழிப்பு மாநாடு ஹைலைட்ஸ் | thirumavalavan Resolutions Highlights of the VCK anti liquor conference

1320392.jpg
Spread the love

தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என விசிக துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் தீர்மானங்களை வாசித்தார். அதன் விவரம்:

  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு, மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வரையறுக்கவும், சட்டமியற்ற வேண்டும்.
  • மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்கிடவேண்டும்.
  • மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும்.
  • மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திடவேண்டும்.
  • தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிடவேண்டும்.
  • மனித வளத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
  • தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
  • மது மற்றும் போதை அடிமையானவர்களுக்கும் மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திடவேண்டும்.
  • டாஸ்மாக்கில் பணிபுரியும் சற்றேறக்குறைய 30 ஆயிரம் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கிடவேண்டும்.
  • மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கும், மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்.
  • மதுவிலக்கு பரப்பியக்கத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து பரப்புரை மேற்கொள்ளவேண்டும்.
  • மதுவிலக்கு போராளி சசிபெருமாள் பிறந்த தினத்தின்போது டாஸ்மாக் கடைகளிக்கு விடுமுறை அளிக்கவேண்டும்.

இந்தத் தீர்மானங்களை வாசித்து, அதை நிறைவேற்றித் தருமாறு திரண்டிருந்த தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார் திருமாவளவன். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்து நிறைவேற்றும் என கோஷமிட்டனர்.

உளுந்தூர்பேட்டையில் திரண்ட மகளிர்: உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை ஒட்டி, உளுந்தூர்பேட்டை திருச்சி சாலையில் உள்ள மாநாட்டுத் திடலில் 75,000 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு மகளிர் அமர்ந்திருந்தனர். மாநாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், மேடையில் கொள்கை விளக்கப் பாடல்கள் பாடப்பட்டது. அப்போது மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த பெண்கள் ஆட்டம், பாட்டம் என ஆர்ப்பரித்தனர். இதனை மேடையில் இருந்தவாறு ரசித்துக் கொண்டிருந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.

— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 2, 2024

கடையை மூட வலியுறுத்திய காவல் துறையினர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றதை ஒட்டி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமான வாகனங்களில் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். அப்போது வணிகள பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் கடையை மூட வணிகர்களுக்கு வலியுறுத்தினர். அதன் பேரில் வணிகர்கள் வணிகர்கள் கடையை மூடினர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர்.

பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நான்கு சக்கர வாகனத்தில் போக்குவரத்து விதிகளுக்கு முரணாகவும், மாநாட்டு பந்தல் முன் வாகனத்தை ஓட்டி வந்தபோது, அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் பிரபாவதி, வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது, விசிக ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் அவரைப் பிடித்து தள்ளிவிட்டு, நிலை குலையச் செய்தனர். இதனால் பெண் ஆய்வாளர் கீழே விழந்தார். அருகில் வேறு காவலர்கள் யாரும் இல்லாததால், அவர் யாரும் காப்பாற்றவும் ஆளில்லாமல் தனிமையில் இருந்தார். விசிகவினரோ கோஷமிட்டவாறு அங்கிருந்து புறப்பட்டனர்.

செய்தியாளர்கள் இருக்கையில் பாய்ந்த விசிகவினர்: மாநாட்டு பந்தல் எதிரே செய்தியாளர்களுக்கு இடதுபுறம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது மாநாட்டு மேடையில் திருமாவளவன் தீர்மானங்களை வாசிக்கத் துவங்கினார். அவர் வாசிக்கத் துவங்கியது முதல், விசிக தொண்டர்கள் தடுப்புகள் மீது ஏறி செய்தியாளர்கள் இருக்கைப் பக்கம் வந்து அமர்ந்தனர். இதை அங்கிருந்த கண்காணித்த மாநாட்டு பாதுகாப்பு நபர்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள் தடுப்புக் கட்டைகளை மீறி உள்ளே புகும் வகையில் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். இதை மேடையில் இருந்து கவனித்த திருமாவளவனும், அவர்களை கண்டிக்கும் தொனியில் பேசியும், பொருட்படுத்தாத தொண்டர்கள், செய்தியாளர்கள் பக்கம் நுழைந்து மேடையை நோக்கி முன்னேறியதால், செய்தியாளர்களுக்கும் விசிக தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அவர்கள் தங்களது இருக்கையில் இருந்து வெளியேறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *