திருச்சி: தமிழகத்தில் கட்சிகளுக்குள் போட்டியில்லை, கருத்தியல்களுக்கு இடையேதான் போட்டி. இங்கு நடப்பது திராவிட கருத்தியலுக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையே நடக்கும் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது கோவையில் நடந்த ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் உள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தையை வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்து விட்டு சிறைியலிருந்து வந்தவன் பெற்றத் தாயை கொலை செய்கிறான். அந்தக் குற்றவாளியின் நீதிமன்றம் விடுவிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டதோ, இச்சமூகம் வாழ வாய்ப்பற்ற கொடூரமாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது.
சிந்தனையின் வெளிப்பாடு செயல். சிந்தனை சமூகத்தின் வெளிப்பாடு. சமூகமே கேடுகெட்டுவிட்டது. நிறைந்த போதை; எங்கு பார்த்தாலும் போதை. கோவையில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் நீண்ட நாட்களாக அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. காவல்துறை சுட்டு பிடித்தோம் என்கிறார்கள். இதற்கு நாம் அனைவரும் தலைகுனிய வேண்டியதாக உள்ளது. ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்குமா என்ற நடுக்கம் ஏற்படுகிறது. கடும் சட்டங்கள் இருந்தால் தான் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும்.
பொள்ளாச்சியில், அண்ணா பல்கலை என இதுபோன்று பாலியல் வன்புணர்வுகள் தொடர்ச்சியாக நடந்துள்ளது. அதிமுக குறித்து நான் சொன்னது விமர்சனமல்ல உண்மையை சொன்னேன். அதிமுகவினர் பேசுவதெல்லாம் ஒரு பொது மனிதனாக பாருங்கள். துரோகம், சமூக நீதி, சுயமரியாதை குறித்து பேச இவர்களில் யாருக்காவது தகுதி இருக்கிறதா?. நான்தான் திராவிடத்தின் உண்மையான வாரிசு என்று சொல்லும் போது வெறி வருமா வராதா, அதனால்தான் பேசினேன். ஆரியத்தை எதிர்க்க வந்தது திராவிடம் என்கிறார்கள். தமிழர் என்று வைத்தால் பார்ப்பனர்கள் ‘நானும் தமிழன்’ என்று உள்ளே வந்து விடுவார்கள் என்று பெரியார் தொட்டு, வீரமணி வரை பேசி வருகின்றனர்.
அதே கருத்தை தான் அதிமுகவினர் பேசுகிறார்கள். திராவிடம் என்று இருக்கும்போது திராவிட பார்ப்பனப் பெண் ஜெயலலிதாவின் தலைமையை திராவிடத் தலைவர்கள் எப்படி ஏற்றார்கள்?. ஆரியத்தின் முன்பு திராவிடம் மண்டியிட்டது. மண்டியிட்டால் கூட பரவாயில்லை குப்புறவிழுந்து கும்பிட்டது. இதில் சுயமரியாதை பற்றி பேசுகிறீர்கள். இதுதான் தன்மானமா?. தமிழ் இனத்தின் தலை நிமிர்வா?. சுயமரியாதை இதுதானா?. கார் டயரின் முன்பு விழுந்து கும்பிட்டவர்கள் இவர்கள்.
காளிமுத்து, திருநாவுக்கரசர் ஆகிய 2 பேரை தாண்டி யாரேனும் ஒருவர் ஜெயலலிதா முன்பாக நிமிர்ந்து பேசி இருக்கிறார்களா? திமுக, அதிமுக சுயமரியாதை பற்றி பேசத் தகுதி இல்லை. இடஒதுக்கீடு விவகாரத்தில் ஏமாற்று வேலை செய்கின்றனர். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் பாஜக தேவையற்ற வேலையை செய்கிறது. மக்களை பதற்றத்தோடு வைத்து பார்க்கிறார்கள். அப்போதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும். ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயர் நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது.
இரண்டு மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும்?. பிஹார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையை செய்கிறார்கள். அப்படி வழங்கும் போது தமிழ்நாடு மற்றுமொரு பிஹாராக மாறிவிடும். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித், நான் சொன்ன அதே கருத்தை தான் தெரிவித்துள்ளார். இந்த முறையே தவறு. இது போன்ற கலாச்சாரமே தவறு. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் இதுபோன்ற நிலை இல்லை. அனைத்து அரசியல் கட்சித் தலைவருக்கும் பொதுவான இடத்தை ஒதுக்கி ஒவ்வொருவரும் அங்கு வந்து பேசிவிட்டு செல்லட்டும். மக்கள் அதை பார்த்து வாக்களிக்கட்டும்.
ஒடிஷா, பிஹாரில் பிரதமர் மோடியின் அவதூறு கருத்துக்களை வரவேற்கும் தமிழிசைக்கு சங்கீத்திசைன்னு பெயர் வைக்கலாம். நான் தேர்தல் அரசியலுக்கு வந்து வெற்றி பெறவில்லை என கேட்கும் நீங்கள் எனக்கு வாக்களித்துவிட்டு கேளுங்கள்.
தமிழகத்தில் கட்சிக்குள் போட்டியில்லை, கருத்தியல் போட்டி தான். இங்கு நடப்பது திராவிட கருத்தியல் – கோட்பாட்டுக்கும், தமிழ் தேசிய கருத்தியல் கோட்பாட்டுக்கும் இடையே நடக்கும் போட்டி” என்று கூறினார்.