விழுப்புரம்: விக்கிரவாண்டியில் பசுமை தாயக தலைவர் சவுமியா அன்புமணி , அவரது மகள் சங்கமித்ரா அன்புமணி ஆகியோர் பாமக வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.
அப்போது செய்தியாளர்களிடம் சவுமியா அன்புமணி கூறியது: “விக்கிரவாண்டி அதிக அளவு குடிசைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இத்தனை ஆண்டு காலம் திராவிட கட்சிகள் ஆட்சி செய்தும் குடிசைகள், கட்டடங்களாக மாறவில்லை. தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை இல்லை. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு செல்ல சரியான பேருந்து வசதிகளும், சாலை வசதிகளும் இல்லை. இது விவசாயத்தை நம்பியுள்ள பகுதியாகும். தேர்தல் நேரத்தில் தான் ஒரு வார காலத்துக்கு அமைச்சர்கள் முகாமிட்டு மக்களிடம் குறைகளை கேட்பார்கள். அதன் பிறகு அவர்கள் சென்று விடுவார்கள், மக்களின் குறைகள் நிறைவேறாது.
தேர்தல் முடிந்த பிறகும் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் உங்களுடன் இருப்போம்.9-வது அட்டவணைப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு தந்தார். இதுவே மற்ற மாநிலங்களில் அதிகபட்சமாக 50 சதவீதம் தான் உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். சரியான சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை எனக்கூறி இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும். அனைத்து கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஒரு மாதத்தில் இப்பணியை முடிக்கலாம்.
சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏக்கள் ஐந்து பேர் இட ஒதுக்கீடு போராட்டத்துக்காக பேசி வருகிறார்கள். இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் கூடுதல் பலம் எங்களுக்கு கிடைக்கும். பாமக எழுச்சியை பார்த்து திமுகவினர் மக்களுக்கு பணம் கொடுத்து கூட்டத்துக்கு வராமல் தடுக்கின்றனர். இச்செய்தியை வெளிக்கொண்டு வந்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் அப்போது மேட்டூர் எம்எல்ஏ, சதாசிவம், மாநில செயற்குழு மோகன், ஒன்றிய செயலாளர்கள் மேச்சேரி சுதாகர், விக்கிரவாண்டி கோபாலகிருஷ்ணன், அரியலூர் திருமாவளவன், கடலூர் தாமரைக்கண்ணன்,கோபிநாத் புதுச்சேரி கணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.