சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. சிறையில் இருந்தே குற்றத்தை செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா?” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகமே இன்று சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு சிந்தித்துக் கூட பார்க்க முடியாத இழப்பு. தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து விட்டது. தமிழகத்தில் போலி சரக்குகளும் அதிகரித்து விட்டது. போலி சரண்டர்களும் அதிகரித்துவிட்டது.
இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. சிறையில் இருந்தே குற்றத்தை செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா? என்று எனக்கு தெரியவில்லை. சரணடைந்தவர்கள் யாரும் குற்றவாளிகள் கிடையாது என நான் சொல்லவில்லை. என்னிடம் பேசிய ஒரு சாதாரண பெண் கூட சொல்கிறார்.
இந்த கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நிச்சயம் தேவை. ஆம்ஸ்ட்ராங்கின் கடைசி சொற்பொழிவில் அவர் முதல்வரையும் அவரது மகனையும் சாடியிருக்கிறார். எனவே இந்த கொலையில் அரசியல் பின்புலம் இருக்கிறது. முதல்வர் இனியும் தூங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை” என்று தமிழிசை பேசினார்.