தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களின் சலுகைகளைப் பெற 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையை, ஒன்றாம் வகுப்பிலிருந்தே அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டுமென மாற்ற வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் சி.வீரமணி என்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிராமம் ஒன்றில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராக இருப்பவர் சி.வீரமணி.
கடந்த வாரம் திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினின் கார் இவரது பள்ளி இருக்கும் கிராமத்தின் வழியே சென்றபோது , முதல்வரிடம் மனு ஒன்றைத் தந்துள்ளார் இவர்.
அதில், பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புரட்சிகளைச் செய்து வரும் நமது திராவிட மாடல் அரசு, தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்களின் சலுகைகளைப் பெற 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டுமென்கிற நிபந்தனையை “1ம் வகுப்பு முதல் 12 வரை எனத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

கூடவே, மருத்துவக் கல்விக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களூக்கு வழங்கப்படும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டுமென்கிற கோரிக்கையையும் வைத்திருக்கிறார்.