“திராவிட யூனிவர்சிட்டியில் படித்த வைகோ போல் நானும் அந்த யுனிவர்சிட்டி மாணவன் தான்!” – மு.க.ஸ்டாலின் – vaiko rally!

Spread the love

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

“ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் என் இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டில் தன் காலடி படாத இடங்களே இல்லை என மக்கள் பிரச்னைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ. நெஞ்சுரத்தையும், ஸ்டாமினாவையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என ஆச்சர்யப்பட தோன்றுகிறது. இளைஞர்களுடைய வேகத்தையும், உத்வேகத்தையும் வைகோவிடம் காண முடிகிறது. இளைய தலைமுறையின் நலனுக்காகவும், எதிர்கால நன்மைக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றும் இயக்கம் தான் திராவிட இயக்கம். தன் தள்ளாத 95 வயதிலும் தவறாமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும், அதற்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என தன் இறுதி மூச்சு வரை உழைத்தவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த கலைஞர் 80 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரர். சக்கர நாற்காலியில் அமர்ந்தும் மக்களுக்காக உழைத்தவர். தன் முதுமை காலத்திலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களோடு அரசியல் செய்தவர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட திராவிட யூனிவர்சிட்டியில் படித்தவர் தான் வைகோ. நானும் அந்த யுனிவர்சிட்டி மாணவன் தான். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்குத் தேவையானவற்றை முன்னிறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் நிச்சயம் வெற்றி பெறும்.

காந்தியின் நடைபயணமும், மாவோவின் நடைபயணமும் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது. திராவிட இயக்க மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக கர்ஜித்த வைகோ முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்து விட்டு நடைபயணம் மேற்கொள்கிறார். இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பொருளை நிச்சயம் ஒழிக்க வேண்டும். போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதை ஒழிக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனால், ஓரளவிற்கு பலனும் கிடைத்துள்ளது. போதைப்பொருள் மிகப்பெரிய நெட்வொர்க், அதை ஒழிக்க மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவிற்குள் போதைப்பொருள் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர் , ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்கள் தான். அந்த நெட்வொர்க் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதை பொருளை ஒழிக்க தமிழ்நாட்டின் துறைகள் ஒன்றிய அரசின் துறைகளோடும் பிற மாநில அரசு துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பது சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத்துறையை சார்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்லும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது.

அவர்களை தீவிரமாக கண்காணித்து பொறுப்போடு வளர்க்க வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான். ஒன்றிய அமைச்சர் பதவியில் இருப்பவர்களே வெறுப்பு பேச்சுக்களை பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் சீர்குலைக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் என எல்லோரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்த காலம் போய் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கக்கூடிய வேலையை பிளவுவாத சக்திகள் செய்து வருகிறார்கள்

அன்பு செய்ய சொல்லி தர வேண்டிய ஆன்மிகத்தை சிலர் வம்பு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். மது போதையும் அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க நாம் ஒன்று சேர வேண்டும். வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும் அதைவிட அவரின் உடல்நலம் பெரிது. எனவே, அவர் கவனத்துடன் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள வேண்டும். இனி, இதுபோல் கடுமையான நடைபயணங்களை மேற்கொள்ளக் கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *