திரிபுரா மாநிலத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 16 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
அகர்தலா ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 16 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் முதல்கட்ட விசாரணை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் எதி ஷேக்(வயது 39), முகமது மிலான்(வயது 38), கபீர் ஷேக்(வயது 34) தவிர மற்றவர்கள் அனைவரும் 30 வயதுக்கு குறைவானவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீது அகர்தலா ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், இவர்கள் பின்னணியில் வேறேதேனும் சட்டவிரோத கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளதை தொடர்ந்து, அண்டை நாடான இந்தியாவுக்குள் நுழைய வங்கதேசத்தினர் முயல்வதால், திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் மேகலயா மாநில எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.