மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகள் குறித்து தணிக்கை நடைபெற்ற நிலையில், கோயிலின் கணக்கர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, அப்பகுதியில் ஏராளமான நிலங்கள், வணிக கட்டிடங்கள் உள்பட பல்வேறு சொத்துகள் உள்ளன. இதன்மூலம், கோயிலுக்கு பல்வேறு வரியினங்கள் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகள் குறித்து தணிக்கை துறையினர் ஆய்வு செய்ததாகவும். இதில், வருவாய் கணக்குகளில் பல்வேறு குளறுபடிகளை தணிக்கை துறையினர் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும், கோயில் நிலங்களில் அரசு சார்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்வதில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தினரிடையே கடந்த சில மாதங்களாக பணிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வேதகிரீஸ்வரர் கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக கணக்காளராக பணிபுரிந்து வந்த விஜயன் என்பவர், திடீரென நிர்வாக காரணங்களுக்காக பணியிடம் மாற்றம் செய்யப்படுவதாக கூறி, கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரளயகாலேஸ்வரர் கோயிலுக்கு கணக்காளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தணிக்கை துறையினர் ஆய்வை தொடர்ந்து, கோயிலின் கணக்காளர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.