திருக்கோவிலூர் டேஞ்சர்.. விக்கிரவாண்டிக்கு வண்டியைத் திருப்பும் பொன்முடி! – Kumudam

Spread the love

தொடர் சர்ச்சை பேச்சுக்களால், அமைச்சர் பதவி, கட்சிப் பொறுப்பு என அனைத்தையும் இழந்து இன்று எம்.எல்.ஏ.வாக மட்டும் இருக்கிறார் பொன்முடி. அதேபோல, வயது முதிர்வின் காரணமாக அவருக்கு வரும் தேர்தலில் சீட் கிடைக்காமலும் போகலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கட்சிப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்பை பறித்துவிட்டதால், தன் அதிருப்தியை சமாளிக்க வரும் தேர்தலில் எப்படியும் தலைமை தனக்கு சீட் கொடுக்கும் என்று மலைப்போல் நம்பியிருக்கிறார் பொன்முடி. அதற்கேற்ப இப்போதிருந்தே சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக ஆரம்பித்திருக்கிறார்.

அறிவாலயம் நடத்திய சர்வே:

இந்த நிலையில்தான், அறிவாலயம் தரப்பு எடுத்த ரகசிய சர்வேயில் ‘பொன்முடி இருமுறை எம்.எல்.ஏவாக இருக்கும் திருக்கோவிலூர் தொகுதி தி.மு.க.விற்கு சாதகமாக இல்லை’ என்ற ரிசல்ட் வந்திருக்கிறது. ஏற்கெனவே, ‘இம்முறை கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும். இல்லையெனில் தன்னை தலைமை ஒரேடியாக கட்சியில் இருந்து ஓரங்கட்டிவிடும்’ என்ற அச்சத்தில் உழன்று கொண்டிருக்கும் பொன்முடிக்கு இந்த ரிசல்ட் மேலும் ஷாக் கொடுத்திருக்கிறது. 

இதனால், திருக்கோவிலூரில் இருந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு தாவ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போதே திருக்கோவிலூர் நிர்வாகிகளை அழைத்து விருந்தும் வைத்திருக்கிறாராம் பொன்முடி.

அன்னியூர் சிவா அப்செட்:

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மறைவை தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார் அன்னியூர் சிவா. எனவே, வரும் தேர்தலிலும் தனக்கே அங்கு சீட் கிடைக்கும் என அன்னியூர் சிவா எதிர்பார்த்துள்ளார். ஆனால், பொன்முடியின் தொகுதி மாறும் முடிவு அன்னியூர் சிவாவினை ஏகத்துக்கும் அப்செட் ஆக்கியிருக்கிறது. 

ஏற்கெனவே, விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணனுக்கும் பொன்முடிக்கும் இடையே பனிப்போர் நடந்துவரும் நிலையில், அன்னியூர் சிவாவும் அப்செட் ஆகியிருப்பது விழுப்புரம் தி.மு.க.வில் கடமுடா சத்தத்தை அதிகரித்து இருக்கிறது.

திராவிட கழகம் சார்பில் கடந்த ஏப்ரம் மாதம் 8-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் தொடர்புப்படுத்தி பேசியிருந்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(குமுதம் ரிப்போர்ட்டர் / 05.08.2025)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *