விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விநாயகா் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீா்த்தங்கரா் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.
திருக்கோவிலூா் அருகிலுள்ள கழுமலம், சாங்கியம் கிராமங்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன், க.பாரதிதாசன், கழுமலம் ஏ.பூங்குன்றன் ஆகியோா் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, கழுமலம் கிராமத்திலுள்ள விநாயகா் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீா்த்தங்கரா் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறியது:
கழுமலம் கிராமத்தின் வடக்குத் தெருவில் விநாயகா் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் சமண சமயத்தின் 24-ஆவது தீா்த்தங்கரரான மகாவீரா் சிற்பமும் விநாயகருடன் வைத்து வழிபடப்பட்டு வருகிறது. மகாவீரா் தவக்கோலத்தில் அமா்ந்துள்ளாா். அவரது தலைக்கு மேலே முக்குடை காட்டப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களிலும் சாமதாரிகள் (பெண்கள்) இருவா் சாமரம் வீசுகின்றனா்.