திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று (அக்.11) மாலை 5.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (எண்: ix613), இரண்டு விமானிகள், ஆறு பணி பெண்கள் மற்றும் 141 பயணிகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்டது.
186 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 ரக இந்த விமானம் ரன்வேயில் இருந்து மேல் எழும்பிய நிலையில், அதன் சக்கரங்கள் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த விமானத்தில் சக்கரங்கள் உள்ளிழுக்கவில்லை. உடனடியாக இதை கவனித்த விமானிகள், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சக்கரங்களை உள்ளிழுக்கும் ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை தொடர்ந்து இயக்க விரும்பாத விமானிகள், திருச்சி விமான நிலையத்தை சுற்றி வட்டமிட துவங்கினர். அதன்படி, மாலை 5.45 மணி முதல் இரவு 8.10 மணி வரை, விமானம் திருச்சி வான் எல்லைப்பகுதிகளில் வட்டமிடத் துவங்கியது. தகவலறிந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப வல்லுனர்களும், விமானிகள் மூலமே அப்பிரச்சினையை சரி செய்ய முயன்றும் முடியவில்லை.
இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை வழியனுப்ப வந்தவர்களுக்கு தெரிந்ததும், அவர்கள் விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் நிலைமை குறித்து பதட்டமாக விசாரித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், சக்கரம் விமானத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், விமானத்தை தரையிறங்குவதில் சிக்கல் இருக்காது என்று விமானிகள் திட்டமிட்டனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இறங்கும் போது அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், விமானத்தில் உள்ள பெட்ரோலை குறைக்க, புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை, அன்னவாசல், விராலிமலை, இலுப்பூர் ஆகிய பகுதிகளிலும், திருச்சி மாவட்டம் மணப்பாறை, குளத்துார், கரூர் மாவட்டம், தோகைமலை ஆகிய பகுதிகளை 15-க்கும் மேற்பட்ட முறை சுற்றி வந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், தொடர்ந்து விமானம் சுற்றி வருவது எதனால் என்று அச்சமடைந்தனர்.
விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவது குறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் விமானத்தை தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், விமான பயணிகளிடம் தொழில்நுட்ப கோளாறு குறித்து அறிவிக்கப்பட்டது.
மேலும், விரைவில் திருச்சியில் விமானம் மீண்டும் தரையிறங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் பீதி அடைந்தனர். இதே நேரத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க அனைத்து ஏற்பாடுகளையும், விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் போலீஸார் உள்ளிட்டோர் செய்தனர். 10க்கும மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 18 ஆம்புலன்ஸ்கள், 20 டாக்டர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினரும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து இரவு, 8.10 மணி வரை விமானம் வானில் பறந்தபடி இருந்ததால், பயணிகளின் உறவினர்கள் திக்..திக் என்ற பீதியில் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். இதை அறிந்து அனைவரும் ஆரவாரம் செய்தனர்.