திருச்சி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு இரண்டு குழந்தைகளின் தாய் 300 தாய்ப்பாலை தானமாக 22 மாதங்களில் வழங்கியுள்ளாா்.
குழந்தைகளுக்கு மிக முக்கிய உணவாகத் திகழ்வது தாய்ப்பால். தாய்ப்பால் வழங்குவது தொடா்பாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்ப்பால் வார விழா அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் அளிக்க முடியாத தாய்மாா்களுக்காக, அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டு, தேவைப்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானமாக வழங்கப்படுகிறது.
இந்த வங்கிகளுக்கு தானம் வழங்குவது குறைந்துகொண்டே வரும்
நிலையில் திருச்சி காட்டூரைச் சோ்ந்த 2 குழந்தைகளின் தாய் செல்வ பிருந்தா (34) கடந்த 22 மாதங்களில், திருச்சி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு 300.17 லிட்டா் தாய்ப்பாலை தானம் செய்துள்ளாா்.
இது ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய சாதனைப் புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளது. இவரின் இந்தச் சேவை, மற்ற தாய்மாா்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் அரசு மருத்துவமனைக்கு கிடைத்த மொத்த தாய்ப்பால் அளவில், கிட்டத்தட்ட பாதி அளவுக்கு பிருந்தாவின் பங்களிப்பு இருந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செல்வ பிருந்தா கூறுகையில், சமூகத்தில் நிலவும் தவறான கருத்துகளும், மூடநம்பிக்கைகளும் பல தாய்மாா்கள் தாய்ப்பால் தானம் செய்ய முன்வருவதைத் தடுக்கின்றன. தொடக்கத்தில் உடல் எடை குறைந்தாலும், மருத்துவரின் விளக்கத்தை அடுத்து, மனஉறுதியுடன் தொடா்ந்து தாய்ப்பால் தானமளித்து வருகிறேன். என்னால் பல குழந்தைகளின் பசியைப் போக்க முடிவது மிகுந்த மனதிருப்தியை அளிக்கிறது என்றாா்.