திருச்சி: சிந்தாமணீஸ்வரர் அருளும் ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் கோயில் | Ootathur Sri Suddha Rathneswarar Temple

Spread the love

சிறுநீரகக் கோளாறுகளை நீங்க அருளும் பிரார்த்தனை

ஆடல் அரசனான பஞ்சநதன நடராஜர்தான் சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்யும் மருத்துவன் எனப் போற்றப்படுகிறார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, ஒரு கிலோ வெட்டிவேர் வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகத் தொடுத்து நடராஜருக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பிறகு அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, ஈசனுக்கு எதிரே அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை ஒரு கேனில் (சுமாராக 5 லிட்டர்) எடுத்துச் செல்ல வேண்டும்.

வீட்டுக்குச் சென்றதும், தினமும் இரவில் பிரம்ம தீர்த்த நீரை ஒரு குவளையில் நிரப்பி (100 மி.லி), அதில் ஒரு வெட்டிவேர் துண்டைப் போட்டு ஊற விடவேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேரை எடுத்துவிட்டு, அந்தத் தீர்த்தத்தைப் பருகவேண்டும்.

இப்படி 48 நாள்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதிகம். 48 நாள்களும் இந்தத் தீர்த்தம் கெடாது என்பதும் அதிசயம்.

48 நாள்கள் முடிந்ததும், வெட்டிவேர்த் துண்டுகளை நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும். இப்படிச் செய்து பலன் பெற்றவர்கள் அநேகம் என்கிறார்கள் ஊரார்.

ஊட்டத்தூர் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோயில்

ஊட்டத்தூர் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோயில்

ஊட்டத்தூர் ஸ்ரீபஞ்சநதன நடராஜருக்கு சம்மேளன அர்ச்சனை எனும் சிறப்பு அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கும். ஈசனுக்கும் அம்பாளுக்கும் சேர்த்துச் செய்யப்படுவதே சம்மேளன அர்ச்சனை என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள்.

2000 ஆண்டுகளைக் கடந்த தலம் இது. கால வெள்ளத்தில் சிதிலமாகிப்போன இந்தக் கோயிலை ராஜராஜ சோழன் மீட்டெடுத்துக் கட்டியுள்ளார். அவருக்குப் பின் அவர் மகன் ராஜேந்திர சோழன் மற்றும் பேரன் ராஜாதிராஜன் ஆகியோர் பராமரித்திருக்கிறார்கள். அவர்கள் மூவரின் திருப்பணிகள் பற்றிய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன.

இங்குள்ள ஈசனை ஆண்டுதோறும் மாசி மாதம் 12, 13, 14 தேதிகளில் சூரிய பகவானின் கதிர்கள், கருவறை தாண்டி மூலவர் சுத்தரத்னேஸ்வரர்மீது விழுந்து பூஜிக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.

இந்த அற்புதமான தலத்தில் ஈசனை வழிபட்டு நாம் அனைவரும் ஆரோக்கியமும் அருளும் ஒருங்கே பெறலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *