மேலும் பிரம்மபுரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திரநாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திருமேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரின் வலப்பக்கப் பிராகாரத்தில் அமைந்திருக்கிறது பிரம்மனின் சந்நிதி. மேலும் இங்கு பிரம்மாவின் சந்நிதிக்கு நேராக நின்று பிரம்மாவையும் தரிசிக்கலாம், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.
ஈசனின் திருநடனத்தை தரிசிக்க விரும்பிய வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் ஈசனின் ஆணைப்படி நவபுலியூருக்கும் சென்று தாண்டவ தரிசனம் கொண்டார்களாம். இறுதியில் திருப்பட்டூருக்கு வந்து ஈசனைத் தியானித்து இங்கே ஜீவசமாதி அடைந்தனர்.
இன்றும் திருப்பட்டூர் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதியும், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் உள்ளதைக் காணலாம். இங்கு தியானித்தால் எண்ணியது கூடுமாம்.

தலையெழுத்தை மாற்றும் பிரம்ம வழிபாடு
இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்து, அம்பிகைக்குப் புடவை சாத்தி, பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பு செய்து, பிராகார வலம் வந்து மனமுருகி வேண்டிக்கொண்டால், நிச்சயம் நம் தலையெழுத்து மாறும் என்கின்றன புராணங்கள்.
தலையெழுத்தை மாற்ற பரிகாரம் செய்பவர்களிடம் அபிஷேகம் மற்றும் மஞ்சள் காப்பு சாத்த 3,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்வார்கள். தங்களால் இயன்ற பக்தர்கள் மஞ்சள் காப்பு சாத்தி வழிபடலாம்.
இயலாதவர்கள் மஞ்சள் வாங்கி கோயிலில் சமர்ப்பித்தால் அதை மஞ்சள் காப்பில் சேர்த்துவிடுவார்கள். இதற்கும் மிகுதியான பலன் உண்டு. திங்கள், வியாழக் கிழமைகளிலும் நட்சத்திரங்கள்: திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களும் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்துவது மிகவும் விசேஷம்.