ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாதஸ்வர மேதை ஷேக் மெகபூப் சுபானி, தனது குடும்பத்தின் 8-வது தலைமுறை நாதஸ்வரக் கலைஞராக பரிமளித்து வந்தார். தனது தந்தை ஷேக் மீரா சாகிப்பிடம் இசை பயின்றவர். பின்னர், உலகப்புகழ் பெற்ற டாக்டர் ஷேக் சின்னா மௌலானா சாகிப்பிடம் 15 ஆண்டுகள் தஞ்சாவூர் பாணியிலான கடினமான இசைப் பயிற்சியைப் பெற்று, தமிழக மண்ணின் கலை மரபை உள்வாங்கிக் கொண்டார்.
தொடர்ந்து பல மேடைகளில் தனது நாதஸ்வர கச்சேரியை அரங்கேற்றி, இசையுலகில் பரிமளித்து வந்தார். மெகபூப் சுபானி அவர்களின் வாழ்வில் பல விருதுகள் கிடைத்தாலும், தமிழக மண்ணின் மீது அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.
இது குறித்து, அவரது மகன் பெரோஸ் பாபு கூறும்போது..
“எனது தந்தை தமிழக முதல்வர் கையில் நேரடியாக ஒரு விருதைப் பெற வேண்டும் என்பது நீண்ட கால ஆசையாக இருந்தது. அந்த ஆசை கடந்த 2022-ம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கைகளால் விருது பெற்றபோது நிறைவேறியது” என்று தெரிவித்துள்ளார்.