திருச்சி, மதுரையில் ரூ.717 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்காக்கள்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்! | Tidel parks in Trichy and Madurai worth Rs. 717 crore: CM Stalin laid the foundation stone!

1351297.jpg
Spread the love

சென்னை: தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.717 கோடி மதிப்பீட்டில், திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.18) அடிக்கல் நாட்டினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.18) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடனும், மதுரை மாநகராட்சி – மாட்டுத்தாவணியில் 314 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை தளம் மற்றும் பன்னிரண்டு தளங்களுடனும் டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தினை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கினை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழகத்தின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

17398710663061

முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2000-ம் ஆண்டு மறைந்த முதல்வர் கருணாநிதி தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் 22.11.2024 அன்று திறந்து வைத்தார்.

திருச்சியில் புதிய டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சூழல் அமைப்பை பரவலாக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக, திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூரில், ரூ.403 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் IT, ITeS, BPOs, Startups போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டத்தில் புதிய டைடல் பூங்கா: மேலும், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாட்டுத்தாவணியில் 314 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் பன்னிரண்டு தளங்களுடன், IT, ITES, BPOs, Startups போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.

இப்பூங்காக்கள் சுமார் 12,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு, குளிர்சாதன வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம், திருச்சி, மதுரை மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் வி. அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *