திருச்சி: ஹைடெக் பார் திறப்பதை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் தனி ஒருவராக உண்ணாவிரதம் | A single farmer went to protest against the opening of a hi-tech bar

1307265.jpg
Spread the love

திருச்சி: ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத் தலைவர் உதவியாளருடன் தனி ஒருவராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டை – அல்லித்துறை இடையே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலம் அருகே புதிதாக மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ‘எஃப்.எல் -2 ஹைடெக் பார்’ திறக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் இன்று காலை 6 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரையும் அவரது உதவியாளரும் சமூக ஆர்வலருமான பீர்முகமது ஆகிய இருவரும் சேர்ந்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ம.ப.சின்னதுரை, “திருச்சி புத்தூர் தொடங்கி சோமரசம்பேட்டை அல்லித்துறை இடையில் அரசு மற்றும் தனியார் நடத்தும் மதுபானக்கூடங்கள் ஏழு உள்ளன. இந்த கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் குடித்துவிட்டு வகனம் ஓட்டிச் செல்பவர்களால் விபத்துகளும் நடக்கின்றன. இதனால் இந்த மதுபானக் கூடங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என கோரிவருகிறோம்.

இந்நிலையில், தற்போது அல்லித்துறை சோமரசம்பேட்டை இடையே உள்ள உய்யக்கொண்டான் பாலம் அருகே புதிதாக மனமகிழ் என்ற பெயரில் மதுபானக்கூடம் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிய வருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன் இதே இடத்தில் மதுபானம் கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்தது நாங்கள் போராடியதால் அந்த முயற்சியை மாவட்ட நிர்வாகம் கைவிட்டது.

இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் இப்போது மதுபானக் கூடம் அமைக்க முயற்சிப்பது ஏற்புடையது அல்ல. தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின் போது ஆண்டுக்கு 500 டாஸ்மாக் கடைகள் வீதம் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறினார். ஆனால், படிப்படியாக மதுக் கடைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

வயலூர் சாலையில் புதிதாக மதுக்கடை திறப்பதை அனுமதிக்க மாட்டோம். வயலூர் சாலையில் எந்த மதுக்கடையும் இருக்கக்கூடாது. தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற போலீஸார், உண்ணாவிரதத்தில் இருந்த இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட ஏற்பாடு செய்வதாக போலீஸார் கூறியதை அடுத்து அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் அமரவைக்கப்பட்டுள்ளனர்.

சின்னதுரையை பொறுத்தவரை உண்ணாவிரத போராட்டம் என்றால் தண்ணீர்கூட அருந்தாமல் காலை 6 மணிக்கு தனது போராட்டத்தை தொடங்கிவிடுவார். போலீஸார் கைது செய்தாலும் அவர் அன்றைய தினம் முழுவதும் உணவருந்த மாட்டார். இது அவரது வழக்கம். மேலும், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றால் படைதிரட்டி எல்லாம் செல்லமாட்டார். ஒற்றை ஆளாகச் சென்று தீவிரமாக போராட்டம் நடத்துவார். அந்த வகையில் ஒற்றை ஆளாக தனது உதவியாளர் ஒருவருடன் மட்டும் இன்றைய போராட்டத்தை நடத்தி வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *