திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானைக்கு கஜ பூஜை | Gaja Pooja to the Elephant Dheivanai at Tiruchendur Temple

1343796.jpg
Spread the love

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானைக்கு கஜ பூஜை நடந்தது. பின்னர் சிறிது நேரம் நடைப் பயிற்சி மேற்கொண்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மாதம் 18-ம் தேதி யானை தெய்வானை (26) தாக்கியதில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினர் சிசுபாலனும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் வனத்துறை, கால்நடைத்துறையின் தீவிர கண்காணிப்பில் யானை இருந்து வருகிறது. கடந்த 6-ம் தேதி யானையை பரிசோதனை செய்த மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், யானை இயல்பு நிலைக்கு முழுவதும் திரும்பிவிட்டதால் பகல் நேரங்களில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்ல பாகனிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து அவ்வப்போது யானை தங்குமிடம் அருகிலேயே அழைத்து வரப்பட்டு இயற்கை சூழலை அனுபவித்து வந்தது. இந்நிலையில் சம்பவம் நடந்து ஒரு மாத காலத்துக்கு பிறகு யானை தங்கும் இடத்தில் கஜ பூஜை இன்று (டிச.18) நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கணபதி ஹோமம், சிறப்பு ஹோமம் நடந்தது. அப்போது யானை தெய்வானைக்கு துண்டு, வேட்டி, மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், கால்நடை உதவி மருத்துவர் அருண், ஆய்வாளர் அர்னால்டு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி பகுதியில் யானை தெய்வானை நடைபயிற்சி மேற்கொண்டது

பின்னர் யானையை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றனர். புதிதாக கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி (வேலவன் விடுதி, குமரன் விடுதி) பகுதிகளில் யானை நடைப்பயிற்சி மேற்கொண்டது. அப்போது அங்கு நின்ற பக்தர்கள் தெய்வானையை வணங்கினர். யானை தெய்வானை ஒரு மாத காலத்துக்குப் பிறகு மீண்டும் நடைப்பயிற்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *