திருச்செந்தூர் கோயிலுக்குள் தவெக-விற்கு அரோகரா கோஷம் ; கோயிலா… பிரசார இடமா?- பக்தர்கள் ஆதங்கம்!

Spread the love

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேச மற்றும் திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். சமீப காலமாக திருச்செந்தூர் கோயில் பிரகாரம், கடற்கரை பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வந்தது. ஆன்மிகத் தலத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் மோகமா? என, அதனை பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.

விஜய் படத்தை காட்டிப் பேசும் ரசிகர்

இது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. இது குறித்த செய்திகளும் பரவியது. இந்த நிலையில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அதிகம் கூடும் இடமான திருக்கோயிலின் முன்புள்ள சண்முக விலாச மண்டபம், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், வசந்த மண்டபம், பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசை, அன்னதானக் கூடம் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டது.

அந்த எச்சரிக்கை பதாகையில், “இத்திருக்கோயில் வளாகத்தில் திரைப்படப்பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். தவறும்பட்சத்தில், காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்  உள் பிரகாரத்தில் த.வெ.கவின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து,  “தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என்ற கோஷத்துடன் தரிசனத்திற்காக காத்திருந்த சில பக்தர்களிடம்,  ”நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு செலுத்த வேண்டும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை இருக்காது” எனவும் கூறி சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.   

விஜய்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய பக்தர்

தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்திய நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக், திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

 அப்புகாரில், கோயிலுக்குள் அரசியல் குறித்து பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.  “திருக்கோயில் வளாகம், கிரிப்பிரகாரம், உள் பிரகாரம், கடற்கரை  உள்ளிட்ட பகுதிகளில் போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது என திருக்கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில்

இந்நிலையில், இதனை கண்காணிக்க வேண்டிய கோயில் செக்யூரிட்டிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். பாதுகாப்பு பணியில் யாரும் இல்லையா? இது செக்யூரிட்டிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. இக்கோயில் வழிபாட்டு தலமா அல்லது கட்சிகளின் பிரசாரத்திற்கான இடமா?” என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *